தை 1, 2024
என் அன்பான தூய ஆரோக்கிய அன்னை கத்தோலிக்க பங்கை நேசிக்கும் என் அன்பான பங்கு மக்களே, இளையோரே சிறுவர்களே,
2023ம் ஆண்டிற்கான கிறிஸ்து பிறப்பையும், 2024ம் ஆண்டின் வருகையைக் கொண்டாடுகின்ற புத்தாண்டு தினத்தையும், எமது ஆலயத்திலும் உங்கள் இல்லங்களிலும் உங்களோடு இணைந்து வரவேற்பதில் நான் மனமகிழ்வும் உளநிறைவும் அடைகின்றேன்.
நான் ஆண்டவரின் அடிமை உமது சொற்படியே எனக்கு நிகழட்டும்’ என்று தன்னையே இறைவாழ்விற்கு அர்ப்பணித்த அன்னை மரியாவின் அர்ப்பணிப்பை லூக்காஸ் முதல் அதிகாரத்தில் நாங்கள் வாசிக்கின்றோம். தனக்கு வர இருந்த துன்பத்தைப் பற்றி அன்னை மரியாள் அஞ்சவில்லை. இறைவனின் சித்தம் எதுவோ அதுவே தனது விருப்பமும் என்று, இறைவனுக்கு மட்டுமே அஞ்சி தன்னை முழுமையாக இறைவனுக்கு அடிமை என்று அர்ப்பணித்தார். தாயாரின் தாழ்மைக்குப் பரிசாக, இறைவனின் தாயாக உயர்த்தப்பட்டார்.
இயேசு பிறந்த விழாவை உலகெங்கும் கொண்டாடும் இவ்வேளையில், பிறக்கும் பாலக இயேசுவுக்கும், அவரது பெற்றோரான தூய சூசை மற்றும் தேவதாயாருக்கும் நாம் என்ன பரிசு கொடுக்கப் போகிறோம். குறிப்பாக, அவர்கள் மூவரும் எதிர்பார்க்கும் பரிசு எதுவாக இருக்குமோ, அதைக் கொடுப்பதே உகந்ததாக இருக்கும். அவர்கள் எம்மிடமிருந்து பெறவிரும்பும் பரிசு பொன்னோ பொருளோ அல்ல. காணியோ பூமியோ, வீடோ சொத்தோ அல்ல. தேவதாயாரும் தூய சூசையப்பரும் தங்களது திருக்குடும்பத்தில் பிறந்திருக்கும் பாலக இயேசுவின் மகிழ்வில், அன்பையும், பண்பையும், பணிவையும், பகிர்ந்து உதவுவதையுமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். பொருண்மிய சிரமங்களில் சிக்குண்டு அவதிப்படும் ஏழைகளுக்கும், பல்வேறு குடும்ப சுமைகளைச் சமாளிக்க முடியாமல் திண்டாடும் குடும்பங்களுக்கும், தாயகத்தில் வறுமையில் வாடும் எம் உடன்பிறவா உறவுகளுக்கும், நாம் உதவும்போது, நீ எனக்கே செய்தாய் என்று, குழந்தை இயேசு குதூகலமடைகிறார்.
தேவதாயாரைப் போன்று, தியாகமும் விட்டுக்கொடுப்பும் நிறைந்த வாழ்வின் அவசியத்தை, வத்திக்கானில் நடந்த நிகழ்வொன்றில் பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களும் விதந்துரைத்துள்ளார். கடுமையான சித்தாந்த நிலைப்பாடுகளைக் கைவிடவேண்டுமென்றும், இன்றைய யதார்த்தங்களைப் புரிந்துகொள்ளும் வாய்ப்புக்களை இத்தகைய கடும் நிலைப்பாடுகள் தடுத்து விடுமென்றும் எச்சரிக்கிறார். நல்ல நோக்கங்கள் என்ற போர்வையில், நம்மை யதார்த்தத்தில் இருந்து பிரித்து முன்னேற விடாமல் தடுக்கும் கடுமையான சித்தாந்த நிலைப்பாடுகளுக்கு எதிராக நாம் விழிப்புடன் இருக்கவேண்டுமென அறைகூவல் விடுக்கிறார்.
ரோம் நகரையும் வத்திக்கானை மையமாகக் கொண்டு செயற்படும் கருதினால்கள் மற்றும் பிரதான நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், இன்றைய காலகட்டத்தின் யதார்த்தத்தைப் புரிந்து, அதன்படி செயற்படுமாறு அழைப்பு விடுத்திருப்பது அனைவருக்கும் முக்கியமான செய்தியாக அமைகிறது.
தேவதாயாரைப் போன்று, அஞ்சாமல் இருக்க துணிவு வேண்டும், துணிவைப் பெற நம்பிக்கை வேண்டும். நம்பிக்கையுடன், காலத்தின் தேவைக்கேற்ப, யதார்த்த சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, புதியவர்களுக்கும், இளையவர்களுக்கும், வாய்ப்பு மறுக்கப்படுவோருக்கும், புதிய கருத்தியலுடன் இணங்கிப் போவோருக்கும், நாம் அஞ்சாமல், புறமுதுகு காட்டாமல், எமது மனதையும் செவியையும் திறந்துவைத்து, அவர்களது கருத்துக்களிலுள்ள நியாயங்களைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது அவசியமானது.
ரொறன்ரோ அதியுயர் மறைமாவட்டத்தின் புதிய பேராயர் அதிவணக்கத்திற்குரிய பிரான்சிஸ் லியோ அவர்கள் வழங்கியிருக்கும் 2023ம் ஆண்டுக்கான நத்தார் செய்தியில், இரண்டு விடயங்களை ஞாபகப்படுத்துகிறார்.
முதலாவதாக, கடவுள் தமது ஒரே மகனை இந்த உலகிற்கு ஒளியாக அனுப்பினார். கிறீஸ்தவர்களாக, நாமும் இயேசுவின் ஒளியை எமது இதயத்தில் ஏற்ற வேண்டும். நிரந்தரமாக எரியும் இந்த ஒளி, நாம் எந்த சவாலையும் எதிர்கொள்ளும்போது, இன்னும் அதிகமாக பிரகாசித்து, உலகின் தீமைகளிலும் இருளிலும் கரைந்துபோகாமல் எம்மைக் காப்பாற்ற வேண்டும். தேவதாயார் துணிவுடன் ஆம் என்று இணங்கியதுபோன்று, நாமும் எம்மை முழுமனதுடன் இறைவனின் சித்தத்திற்கு எம்மை அர்ப்பணிக்க வேண்டும். அப்படி எம்மை முழுமையாக அர்ப்பணிக்கும்போது, இறைவன் எமது வாழ்வில் ஒளியேற்றி எம் வாழ்வை மாற்றுவார்.
இரண்டாவதாக, இப்படி எமது உள்ளத்தில் இருக்கும் இறை ஒளியை, மற்றவர்களிலும் ஒளிர்வதற்கு, நாம் சில தானதர்மங்களைச் செய்ய முன்வரவேண்டும். இருளும் சவால்களும் தொடர்ந்து எம்மைச் சோதிக்கும்போதும், எமக்குள் இருக்கும் இறை ஒளியை நாம் மற்றவருடன் பகிர்வது அவசியம். இப்படி மற்றவர்களையும் எம்முடன் இணைந்து ஒளிரப்பண்ணுவதன் ஊடாக, அன்பு, நம்பிக்கை, கரிசனை, மன்னிப்பு மற்றும் விசுவாசம் போன்ற இறைபண்புகளை வளர்ப்பதன் மூலம், பலமடங்கு நன்மைகளை நாம் மீளப் பெறுவோம் என்பதை மறக்க வேண்டாம். நோய்வாய்ப்பட்டோர், கைவிடப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு நாம் உதவுவது, எமது இதயத்தில் பிறந்திருக்கும் கிறீஸ்து இயேசுவின் ஒளியை மற்றவரோடு பகிர்ந்து கொள்வதால் வருகின்ற நன்மைகளுக்கான தூய பாதையாக அமையும்.
எனவே, தூய சூசையப்பரும் தேவதாயாரும் செய்ததைப்போன்று, பெத்லகேம் நகருக்கான தூய பயணத்தில் நாமும் மனதால் இணைந்து கொள்வோம். பாலக இயேசுவின் இறைஒளி, உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் உங்களைச் சுற்றியுள்ள அனைவரிலும் நிறைவாக ஒளிர வேண்டுமென வாழ்த்தியுள்ளார் ரொறன்ரோ ஆயர் அதிவண பிரான்சிஸ் லியோ.
எனவே, அன்பான தூய ஆரோக்கிய அன்னை பங்கு மக்களே, இறைவன் எமக்குத் தந்த அருள்வளங்களுக்காக நன்றி கூறும் அதேவேளை, இயன்றளவு மற்றவர்களுடனும் அதைப் பகிர்ந்து, தாழ்ச்சியிலும் இறை அன்பிலும் பிறந்திருக்கும் பாலக இயேசுவை மகிழ்விப்போம். பிறக்கும் புதிய வருடம், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும், அனைத்து நலன்களையும் வளங்களையும் வழங்க இறை ஆசீர் வேண்டி வாழ்த்துகிறேன்.
புpறந்திருக்கின்ற பாலக இயேசுவின் அனைத்து ஆசிகளும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எங்கள் பங்கிற்கும் நிறைவாகக் கிடைக்க வேண்டுமென்று ஆசித்து வாழ்த்துகிறேன்.
இறை இயேசுவின் ஆசியும் வாழ்த்துக்களும் கூறி நிற்கும்,
உங்கள் பணியாளன்,
அருட்பணி சாள்ஸ் கொலின்ஸ்
பங்குத்தந்தை, தூய ஆரோக்கிய அன்னை தமிழ்ப் பங்கு
தொலைபேசி: 416-264-6544
மின்னஞ்சல்: office@olghtamilparish.com
இணையத்தளம்: www.olghtamilparish.com
முகநூல்: https://www.facebook.com/OLGHTamilParish
வலைஒளி: https://www.youtube.com/olghtamilparish